உத்திரபிரதேசத்தில் மணப்பெண் ஒருவர், தனது திருமணத்திற்காக ஒப்பனை செய்ய பியூட்டி பார்லருக்கு சென்றுள்ளார். அங்கிருந்து அவர் காதலனுடன் ஓட்டம் பிடித்துள்ளார். இதனை அறியாது அப்பாவியாய் ஊர்வலம் சென்று கொண்டிருந்த மணமகன், உண்மையை அறிந்து, தனது உறவினர்களுடன் மனமுடைந்து வீடு திரும்பினார்.
கடந்த ஜனவரி 30ஆம் தேதி, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரின் சௌபேபூர் கிராமத்தில், திருமண ஏற்பாடுகள் விமரிசையாக நடந்து கொண்டிருந்தன. அப்பொழுது மணமகன் தனது உறவினர்களோடு ஊர்வலமாக சென்று கொண்டிருந்தார். அதே நேரத்தில் மணமகள் சிவப்பு நிற உடையை அணிந்து கொண்டு, தனது தோழியுடன் தனது திருமணத்திற்கு ஒப்பனை செய்வதற்காக பியூட்டி பார்லருக்கு சென்றுள்ளனர்.
பார்லருக்கு சென்ற மணப்பெண் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தது மணப்பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் மணமகனின் வீட்டாரிடம், தாங்கள் 25 ஆண்டுகளாக லக்னோவில் வசித்து வந்ததாகவும், அப்போது மணப்பெண்ணுக்கு வேறொருவருடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்களது சமூகத்தில் மாப்பிள்ளையைத் தேட வேண்டும் என்ற விருப்பத்தில் இந்த திருமணம் ஏற்பாடுகளை செய்ததாகவும் கூறினர்.
மணமகள் வேறொருவரை காதலிப்பது தெரிந்திருந்தும், இந்த திருமணத்தை அவரது பெற்றோர்கள் ஏற்பாடு செய்திருக்கக் கூடாது என்று மணமகன் வீட்டார் கருதினர். தங்களது குடும்பத்தினர் அடைந்த அவமானத்தினால், வருத்தம் அடைந்த மணமகன் வீட்டார் தங்களது ஊருக்கு திரும்பி சென்றனர்.
இது குறித்து காவல் உதவி ஆய்வாளர் விஜய் துல் கூறுகையில், அந்தப் பெண் முன்பே தனது காதலனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த முடிவை மேற்கொண்டுள்ளதையும், இந்த திருமண ஏற்பாடுகளுக்கு முன்பே பெற்றோரிடம் எதிர்ப்பு தெரிவித்துள்ளததையும் உறுதிப்படுத்தினார். இதையடுத்து அந்த மணப்பெண்ணின் மேல் எஃப்ஐஆர் பதிவு செய்து அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருமண நாளன்று, காதலனுடன் மணமகள் ஓட்டம் பிடித்த சம்பவம், சௌபேபூர் கிராமத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.