சிறிய அளவில் கடன் வாங்கியவர்களுக்கு தொல்லை கொடுத்தால், 10 ஆண்டு சிறை தண்டனை என கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரர் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரர் கூறுகையில், சிறு கடன்களை வசூலிக்க தொல்லை கொடுப்பதை தடுப்பதற்காக அமைச்சரவை ஒப்புதல் பெற்று, சட்ட திருத்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளோம். அதிகரித்து வரும் தற்கொலைகள் மற்றும் அவதூறு குறித்த பரவலான புகார்களைத் தொடர்ந்து இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட வரைவின் கீழ், கடன் வாங்கியவர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினருக்கு எதிராக வன்முறை, மிரட்டல் அல்லது எந்தவொரு வகையான வற்புறுத்தலையும் பயன்படுத்துவது ஒரு குற்றமாகக் கருதப்படும். கடன் வாங்கியவர்களை திருப்பிச் செலுத்துமாறு அச்சுறுத்தவோ அல்லது அழுத்தம் கொடுக்கவோ வெளிப்புற நிறுவனங்களைப் பயன்படுத்துவதையும் இந்த அவசரச் சட்டம் தடைசெய்கிறது மற்றும் கடன் வாங்கியவர்களின் வீடுகள் அல்லது வேலை செய்யும் இடங்களுக்கு அடிக்கடி செல்வதைத் தடைசெய்கிறது.
சிறு கடனை கட்டாயப்படுத்தி துன்புறுத்தி வசூல் செய்தால், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை என்கிற சட்ட விதிமுறைகள் ஏற்கனவே உள்ளன. இந்த தண்டனை காலத்தை 10 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்றும், அதேபோல் அபராத தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்ட விதிகளை மீறி, சிறு கடனை வசூலிக்கும் நபர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும் என்பதை உணர்த்தவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. சிறு கடன் வசூலில் தொல்லை கொடுப்பவர்களுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து உரிய வழிமுறைகளை முதல்வர் சித்தராமையா, சட்டத்துறைக்கு கூறியுள்ளதாகவும், எல்லா அம்சங்களையும் கருத்தில் கொண்டு தான் இந்த அவசர சட்டம் கொண்டு வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Read more : 8 ஆம் வகுப்பு மாணவியை வன்கொடுமை கொடுத்த 3 ஆசிரியர்கள்.. கொதித்து போன பெற்றோர்..!! என்ன நடந்தது..?