சென்னை, கடற்கரை சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புதிய நினைவிடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார். பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரின் இரண்டு நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன.
இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் பேரறிஞர் அண்ணா நினைவிடம் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் என்று பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. நுழைவு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் எதிரில் அமர்ந்து படிப்பது போன்ற தோற்றத்தில் பேரறிஞர் அண்ணாவின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அதன் வலபுறம் இளங்கோவடிகள் சிலையும் இடதுபுறம் கம்பர் சிலையும் உள்ளன. நினைவிடங்களின் முன்பகுதி இருபுறங்களிலும் பழமையான புல் வெளிகள் அமைந்துள்ளன.
இடதுபுறத்தில் ‘அண்ணா அருங்காட்சியம்’ அமைந்துள்ளது. அங்கு ‘எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது’ என பொறிக்கப்பட்டுள்ளது. அருகில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அமர்ந்து எழுதும் வடிவிலான சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அவரின் நினைவிடத்தில், ‘ஓய்வெடுத்துக் கொள்ளாமல் உழைத்தவர், இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்’ என்று பொறிக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் நினைவிடத்தின் முன்னே இருபுறமும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு 8-11-2005 அன்று எழுதிய கடிதம் ஆங்கிலத்திலும், தமிழிலும் புத்தக வடிவில் அமைக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் பெரியசாமி வழக்கில் இன்று தீர்ப்பு.
முறைகேடு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை மறுநாள் தீர்ப்பளிக்க உள்ளது. 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை நடந்த திமுக ஆட்சிக்காலத்தில், வீட்டு வசதித்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி பதவி வகித்தார். அப்போது, வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் இருந்து, ஐ.பெரியசாமியை விடுவித்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய, உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்து விசாரித்து வந்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 13-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், முறைகேடு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாமாக விசாரணைக்கு எடுத்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று காலை 10:30 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளார்.