கேரளாவை தொடர்ந்து பெற்ற மகளை பண பிரச்சனை காரணமாக பெற்றோர்களே நரபலி கொடுத்துள்ள சம்பவம் குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் சோம்நாத் பகுதியைச் அடுத்துள்ள தாரா கிர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் 14 வயது சிறுமி. சூரத் நகரில் பள்ளியில் படித்து வந்த சிறுமியை, கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது பெற்றோர் மதிய நேரத்தில் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். அதன்பிறகு, சிறுமி பள்ளி செல்லவே இல்லை. பின்னர், காவல்துறையினருக்கு ஒருவர் தொடர்பு கொண்டு சிறுமியை கொன்றுவிட்டதாக ரகசிய தகவல்கள் அளித்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பெற்றோரிடம் விசாரிக்கையில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

இதையடுத்து, அவர்களிடம் விசாரிக்கையில் அவர்களுக்கு பண கஷ்டம் இருந்ததால் தங்கள் மகளை நரபலி கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும், இதுபோன்று பண பிரச்சனை இருந்தால், பெற்ற மகளை நரபலி கொடுத்தால் பண கஷ்டம் தீரும் என்ற நம்பிக்கையில் அவர்கள் சிறு மகள் என்றும் பாராமல் பலி கொடுத்ததாக காவல்துறை கூறினர்.

முன்னதாக கேரள மாநிலம் கொச்சி, பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்த பகவந்த் சிங் – லைலா தம்பதியினர், முஹம்மது ஷாஃபி என்ற போலி மந்திரவாதியை பணக்கஷ்டம் என்று அணுகியுள்ளனர். அந்த போலி சாமியாரோ தெரியாத பெண்ணை நரபலி கொடுக்க வேண்டும் என்றும், அதற்கான பெண்ணை தானே அழைத்து வருகிறேன் என்று கூறி, அந்த பகுதியில் லாட்டரி சீட்டு விற்று வந்த பெண்ணை ஏமாற்றி அழைத்து வந்து நரபலி கொடுத்துள்ளனர்.

ஆனால் அந்த பலி பூஜை பலனை கொடுக்கவில்லை என்று தமிழகத்தை சேர்ந்த வேறொரு பெண்ணை ஏமாற்றி அழைத்துச் சென்று அவரையும் நரபலி கொடுத்தனர். பின்னர் அவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டி சமைத்து அந்த தம்பதியினர் சாப்பிட்டு விட்டனர். இந்த சம்பவம் தற்போது வெளியாகி நாட்டையே உலுக்கிய நிலையில், பெற்ற மகளை பண பிரச்சனை காரணமாக பெற்றோர்களே நரபலி கொடுத்துள்ள சம்பவம் குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.