நித்யானந்தா சீடர் ஒருவர் முருகன் கோயிலை கட்டி, அங்கு 18 அடியில் நித்யானந்தா சிலையை நிறுவி, கும்பாபிஷேகம் செய்துள்ள சம்பவம் விழுப்புரத்தில் நிகழ்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பெரம்பை கிராமத்தில், பாலசுப்பிரமணியம் என்பவர் மலேசியாவில் உள்ள முருகன் கோயில்போல இங்கு ஒரு முருகன் கோயிலை கட்டிவந்தார். 27 அடி உயரத்தில் முருகன் சிலை பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்ட நிலையில், அந்தக் கோயிலுக்கு “பத்துமலை முருகன் கோயில்” என பெயரிடப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில் உள்ளே நுழையும்போது 18 அடி உயரத்தில் நித்யானந்தா உருவம் கொண்ட சிலையும் உருவாக்கப்பட்டிருந்தது. அச்சிலைக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த சிலையைப் பார்த்ததும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நித்யானந்தா, ஈசனைப் போன்று வேடமணிந்து கையில் சூலத்துடன் தோன்றிய காட்சியைப் போல் இந்த சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த பொதுமக்கள் கும்பாபிஷேகம் நடத்த வந்த சிவாச்சாரியார்களிடம் கேட்டபோது, இந்த சிலை, சிவனின் மற்றொரு அவதாரமான கால பைரவர் என்றும், ஸ்தபதி சிலையை முறையாக வடிவமைக்கவில்லை என்றும் கூறியதாக தெரிகிறது.
பின்னர், கோயில் நிர்வாகி பாலசுப்பிரமணியன் அறைக்குச் சென்று பார்த்தபோது, நித்யானந்தா புகைப்படங்கள் வழிபாட்டில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. நித்யானந்தா சீடர் ஒருவர் முருகன் கோயிலை கட்டி, அங்கு 18 அடியில் நித்யானந்தா சிலையை நிறுவி, கும்பாபிஷேகம் செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.