கேரள கிராமின் வங்கி, தங்களிடம் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் பெற்ற கடனுக்கான தவணையை, மாநில அரசு அளித்த அவசரகால நிதியிலிருந்து கழித்திருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை போன்ற கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், விமானப் படையினர், தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
பிரதமர் மோடி நேரடியாக சென்று நிலச்சரிவு பாதிப்பை ஆய்வு செய்தார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.10 ஆயிரத்தை கேரள அரசு அறிவித்தது. பாதிக்கப்பட்ட மக்களின் வங்கி கணக்கிற்கு இந்த தொகை நேரடியாக வரவு வைக்கப்பட்டது. சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு இந்த தொகை அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், கேரள கிராமின் வங்கி, தங்களிடம் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் பெற்ற கடனுக்கான தவணையை, மாநில அரசு அளித்த அவசரகால நிதியிலிருந்து கழித்திருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்கனவே பெற்று இருந்த கடன் தொகைக்கான இ.எம்.ஐ யாக ரூ. 2 ஆயிரம் பிடித்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேரள வங்கியின் இந்த செயலைக் கண்டித்து பல்வேறு கட்சிகளை சேர்ந்த இளைஞர் அமைப்புகளும் போரட்டத்தில் ஈடுபட்டன.
இதற்கிடையே பிடிக்கப்பட்ட கடன் தவணை தொகையை திருப்பி அளிக்க வேண்டும் என்று வயநாடு மாவட்ட ஆட்சியர் வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே, மாநில அளவிலான வங்கிகள் கூட்டமைப்பில் பங்க்கேற்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் வங்கியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை முழுவதும் தள்ளுபடி செய்வதே சரியாக இருக்கும் எனவும் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
Read more ; இந்தியில் கலைஞர் நாணயம்.. ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்காதது ஏன்? – ஸ்டாலின் விளக்கம்