தமிழ்நாடு சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், மடத்துக்குளம் எம்.எல்.ஏ. மகேந்திரன், மடத்துக்குளத்தில் காதி பவன் கிளை அமைக்க அரசு ஆவண செய்யுமா எனவும், அந்தப் பகுதியில் சுற்றுவட்டார கிராமங்களில் நெசவாளர்கள் சிறு குறு தொழில் செய்பவர்களாக உள்ளதால், தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் காதி பவன் கிளைகளை அமைக்க அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், ”தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் கிராம தொழில் வாரியம் சார்பில் காதி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், அந்த பகுதிகளில் இளைஞர்கள் சுய தொழில் செய்ய விரும்புவோர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் Franchise கொடுக்கப்பட்டு வருகிறது என்றும், Franchise எடுக்கும் கடைகளில் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை லாபம் கிடைப்பதாகவும், சட்டமன்ற உறுப்பினர் கோரிய தொகுதியில் இளைஞர்கள் விரும்பினால் பிரான்சைஸ் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், கதர் பொருட்களின் விற்பனையை அதிகரிக்கவும், ஊக்குவிக்கவும் தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கதர் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.