ரேஷன் கடை பணியாளர்கள் சிறப்பு ஊதிய உயர்வு தொடர்பாக எழுத்துப்பூர்வ கோரிக்கை அளிக்க கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது
கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாயவிலை கடை பணியாளர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை, சிறப்பு ஊதிய உயர்வு வழங்குவதற்கு முரண்பாடுகள் ஏதுமில்லாத தீர்வுகளை பரிசீலித்து பரிந்துரைக்க குழு அமைத்து ஏற்கனவே தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு ஆணையத்தின் கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநரான பாலமுருகன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நியாயவிலை கடை பணியாளர்களின் கோரிக்கைகளான, நியாய விலை கடை பணியாளர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை, சிறப்பு ஊதிய உயர்வு முரண்பாடுகள் ஏதும் இல்லாத தீர்வுகளை பரிசளித்து, அது தொடர்பான பரிந்துரையினை ஜூலை 31ஆம் தேதிக்குள் பதிவாளருக்கு அனுப்ப கூட்டுறவுத்துறை உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், நியாயவிலைக் கடை பணியாளர்கள் சிறப்பு ஊதிய உயர்வு தொடர்பாக எழுத்துப்பூர்வ கோரிக்கை அளிக்க கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த எழுத்துப்பூர்வ கோரிக்கையை ஜூலை 14ஆம் தேதிக்குள் கூட்டுறவுத்துறை அமைத்த குழுவிடம் சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.