கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் குணசேகரனிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மறுவிசாரணை நடந்து வருகிறது. இதுவரை விசாரிக்கப்படாத புதிய நபர்களிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆறுமுகசாமி, அவரது மகன் செந்தில்குமார் மற்றும் உதவியாளர் பழனிசாமி, புதுச்சேரியை சேர்ந்த ரிசார்ட் உரிமையாளரான நவீன் பாலாஜி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் 3-வது நாளாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று மதுரையைச் சேர்ந்த டெக்ஸ்டைல் அதிபரான லாஜி வோரோவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரிடம் தனிப்படை இன்று விசாரணை நடத்தி வருகிறது. மன்னார்குடி சேரம்குளத்தைச் சேர்ந்த குணசேகரனை கோவையில் வைத்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். ஜெயலலிதாவிடம் சிறிது காலம் கார் ஓட்டுநராக இருந்த குணசேகரனிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. குணசேகரன் அதிமுக ஆட்சிக்காலத்தில் முதல்வர் அலுவலகத்துக்காக டிராவல்ஸிலும் கார் ஓட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.