கிருஷ்ணகிரி அருகே இருக்கின்ற கிட்டம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னப்பையன் இவருடைய மகன் ஜெகன்(28) இவர் ஒரு டைல்ஸ் ஒட்டும் தொழிலாளர். இவரும், அவதானப்பட்டி அருகில் இருக்கின்ற முழுக்கான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சரண்யா (21) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இருவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட பெண்ணின் வீட்டில் இவர்களின் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு இருந்திருக்கிறது.
இந்த நிலையில் தான் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கிருஷ்ணகிரி அணை பிரிவு சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஜகனை சரண்யாவின் தந்தை சங்கர் உட்பட 3 பேர் வழிமறித்து அவரை வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். இந்த கொலை வழக்கில் அந்த பெண்ணின் தந்தை சங்கர் உட்பட 3 பேரும் நீதிமன்றத்தில் சரணடைந்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். தற்சமயம் சரண்யா தன்னுடைய கணவர் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் தான் சென்ற 26 ஆம் தேதி மாலை சரண்யா வீட்டில் இருந்தபோது அவருடைய தாயார் ரத்தினம்மாள்(38) மற்றும் 3️ பேர் அங்கு சென்று உள்ளனர். அப்போது சரண்யாவிடம் ஜெகன் கொலை வழக்கு குறித்து நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் வழங்கக்கூடாது என்று மிரட்டி அவரை தாக்கி இருக்கிறார்கள்.
இது குறித்து சரண்யா கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் வழங்கிய புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக ஆபாசமாக பேசுதல், தாக்குதல் நடத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரத்தினம்மாள் (38) அவருடைய உறவினரான சுண்டே குப்பம் அருகே இருக்கின்ற பாறை கொட்டாயை சேர்ந்த பொன்மணி (34) ஆகிய இருவரை கைது செய்தனர் தலைமறைவாக இருக்கின்ற 2 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.