அதிமுக தலைமை அலுவலகத்தில் கலவரம் நடந்தபோது சரியான நேரத்தில் காவல்துறையை அனுப்பி அதிமுகவினரின் உயிரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காப்பாற்றியுள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி, ”அதிமுகவில் மிக மூத்தவரான பொன்னையன் பல உண்மைகளை அந்த ஆடியோவில் பேசியிருப்பதாக தெரிவித்தார். தனக்கு வரக்கூடிய மிரட்டல்களால் ஆடியோவில் இருப்பது தனது குரல் அல்ல என பொன்னையன் மாற்றிப் பேசுவதாகவும் புகழேந்தி கூறினார். முன்னாள் அமைச்சர் பொன்னையன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை என்று கூறிய புகழேந்தி, பொன்னையன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் கலவரம் நடந்தபோது சரியான நேரத்தில் காவல்துறையை அனுப்பி வைத்து அதிமுக-வினரின் உயிர்பலி நிகழாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதுகாத்துள்ளதாக புகழேந்தி பாராட்டு தெரிவித்தார். விசுவாசத்தின் பிறப்பிடமாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருப்பதாகக் கூறிய புகழேந்தி, ஓபிஎஸ்-க்கு இன்னொரு முகம் உண்டு என்றும், சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்றும், எடப்பாடி தரப்பினரை எச்சரித்தார்.