காதி காட்டன் (கதர் பருத்தி) நெசவாளர்களுக்கு 33 சதவீத ஊதிய உயர்வை காதி கிராமத் தொழில் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த மாதம் 30-ம் தேதி குஜராத் மாநிலம் கட்ச்சில் நடைபெற்ற காதி கிராமத் தொழில் ஆணையத்தின் 694-வது கூட்டத்தில் பிரதமர் விடுத்த அழைப்பை கருத்தில் கொண்டு, தொழிலாளர்களின் ஊதியத்தை நூல் சுருளுக்கு ரூ.7.50-லிருந்து ரூ.10-ஆக உயர்த்த, மனோஜ் குமாரின் தலைமையில் இயங்கும் கேவிஐசி முடிவு செய்தது. இதன்மூலம் கைவினைஞர்களின் மாதாந்திர வருமானம் 33 சதவீதமும், நெசவாளர்களின் வருமானம் 10 சதவீதமும் உயர்கிறது. இந்த முடிவு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
உள்நாட்டுப் பொருட்களை ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் கேவிஐசி உற்பத்திப் பொருட்களை வாங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். கைவினைஞர்களின் வருமானத்தைப் பெருக்கவும், ஏழைகளுக்கு வேலை வழங்கவுமான நோக்கத்துடன் அவர் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார்.