செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் முத்தமிழ் நகர் பகுதியில் வசித்து வந்தவர் மனோகரன்( 65). இவரும், புலிப்பாக்கத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரும் பல்லாவரம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் ஒன்றாக பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், கடந்த 2011 ஆம் வருடம் அக்டோபர் மாதம் இருவருக்கும் இடையில் தகராறு உண்டாகி உள்ளது.
இதில் மனோகரனை கீழே தள்ளிவிட்ட சக்திவேல், அவரை தாக்கியுள்ளார். இதன் காரணமாக, தலையில் பலத்த காயமடைந்த மனோகரன் உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பல்லாவரம் காவல்துறையினர் சக்திவேலை கைது செய்தனர். அதோடு இது குறித்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த சூழ்நிலையில் தான் இந்த வழக்கு விசாரணை நேற்றுடன் முடிவடைந்தது. அதோடு குற்றம் சுமத்தப்பட்ட சக்திவேல் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம் உள்ளிட்டவற்றை விதித்து நீதிபதி காயத்ரி தீர்ப்பு வழங்கினார் இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் வையாபுரி ஆஜராகி வாதம் செய்தார்.