வெள்ளி கிரகத்தில் (வீனஸ்) பல ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன் கடல்கள் இருந்ததாகவும் இதனால் உயிர்கள் வாழ்ந்திருக்கலாம் என்றும் காலப் போக்கில் உயிர்கள் இல்லாமல் போயிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
விண்ணில் விண்கலங்களையும் ராக்கெட்டுகளையும் ஏவி மனிதன் பல ஆராய்ச்சிகளை செய்து வருகிறான். அதற்கெல்லாம் காரணம் பூமியைப் போலவே மனிதன் வாழ்வதற்கான சாத்தியம் வேறு எந்த கிரகங்களிலாவது இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளத்தான். செவ்வாய் கிரகம் இது தொடர்பான ஓரளவு நம்பிக்கையை கொடுத்துள்ளது. அதேபோல், வெள்ளி (வீனஸ்) கிரகத்திலும் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவா என்பது குறித்து ஆராய்ச்சி செய்ய இப்போது உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த ஆராய்ச்சி முயற்சிகளை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு செய்திகள் இப்போது வலம் வருகின்றன.
விஞ்ஞானிகள் தற்போது வீனஸின் கடுமையான அமில மேகங்களில் பாஸ்பைன் என்ற வாயுவைக் கண்டறிந்துள்ளனர். பாஸ்பைனின் இருப்பு, நுண்ணுயிரிகள் பூமியின் அருகில் உள்ள அண்டை கிரகங்களில் வசிக்கக்கூடும் என்பதைக் குறிக்கிறது. இது பூமிக்கு அப்பாற்பட்ட கிரகத்தில் உயிர்கள் வாழ்கின்றன என்பதற்கு ஒரு அடையாளமாகும். வீனஸில் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் உண்மையான உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் பாஸ்பைன் பின்னணியில் மறைந்திருக்கும் ஒரு மாபெரும் உண்மையைப் போட்டு உடைத்துள்ளனர்.
வீனஸ் கிரகத்தில் பல ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல்கள் இருந்ததாகவும், கால போக்கில் வீனஸின் வளிமண்டலத்தில் ஏற்பட்ட வேதியியல் மற்றம் அட்மோஸ்பெரிக் மாற்றங்களால் வீனஸ் தனது கடல்களை இழந்திருக்கலாம் என்றும் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். அதனால் தான் வீனஸ் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கலாம் அல்லது உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளை உருவாக்கி விடலாம் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
வீனஸ் கிரகத்தின் வளி மண்டலம் முழுவதும் கந்தகம் மற்றும் கார்பன்டைன் வாயு நிரம்பியிருப்பதால் கந்தக மேகம், கந்தக மழை, கந்தக ஆறு மற்றும் கந்தக கடல் என அனைத்தும் அமிலமயமாகத்தான் இருக்கும். ஆனாலும் இந்த அதி வெப்ப உயிர்ச் சூழலில் பாஸ்பைன் வாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது வீனஸ் கிரகம் குறித்த ஆராய்ச்சியை வேகப்படுத்தியுள்ளது.