புதுச்சேரியில் விநாயகர் சிலை ஊர்வலம் முன்னிட்டு இன்று மதுபானம் மற்றும் சாராய கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா 18-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து கோவில்களிலும் சதுர்த்தி விழா வழிபாடுகள் நடைபெற்றது. இதுதவிர வீடுகளிலும் மக்கள் பூஜைகள் செய்து வருகின்றனர். சிறிய அளவில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வீடுகளில் வைத்து வழிபாடு நடத்துகின்றனர். ஓரிரு நாட்கள் கழித்து சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படும்.
இந்த நிலையில் இன்று புதுச்சேரி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ள காரணத்தினால் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மதுபானம் மற்றும் சாராய கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஊர்வலத்தின் போது எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தவிப்பதற்காக காவல்துறையினரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி விழா மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயே நடத்தப்பட்டிருக்கிறது. இது இந்த நாட்டின் தேசிய விழாவாகவும், கலாச்சார விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. இது மகாராஷ்டிரா மாநில மக்களின் குடும்ப விழாவாக உள்ளது. மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையாரை வைத்து வணங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.