திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இருக்கின்ற தச்சங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர்கள் முனியாண்டி( 60), சிவகுமார் (48) இருவரும் நேற்று முன்தினம் மதியம் தச்சங்குறிச்சி டாஸ்மாக் கடையில் மது அருந்தி உள்ளனர் அதன் பிறகு முனியாண்டிக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் அவர் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இத்தகைய நிலையில் தான் முனியாண்டி உடன் மது குடித்த சிவகுமாரை அவரது உறவினர்கள் நேற்று காலை விடிந்தவுடன் எழுப்பிய போது படுக்கையிலேயே அவர் உயிரிழந்து கிடந்தார். இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் மது அருந்தியதால் இருவரும் உயிரிழந்து விட்டதாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். ஆனால் தச்சங்குறிச்சி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மது போதையில் உணவு சாப்பிடாமல் இருந்ததால் அவர்கள் உயிரிழந்ததாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அறிந்து கொண்ட திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார், ஏடிஎஸ்பி குத்தாலிங், லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த இருவரின் உடலையும் பிரேத பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளையும் காவல்துறையினர் செய்து வருகின்றனர். மயிலாடுதுறை தஞ்சை போன்ற பகுதிகளை தொடர்ந்து திருச்சியில் மது குடித்ததால் 2 பேர் உயிரிழந்ததாக வெளியாகும் தகவல் அதிகாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மயிலாடுதுறை பகுதியில் உயிரிழந்த நபரின் மரணம் குறித்து விசாரணை நடத்தியதில் முன்விரோதம் காரணமாக, சைனைடு கலந்த மதுவை கொடுத்து அவரது சகோதரரே கொலை செய்தார் என்பது தெரிய வந்தது. இதே போல திருச்சியில் நடைபெற்றுள்ள சம்பவத்தில் வேறு ஏதாவது காரணம் இருக்குமா என்று காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.