இந்தியாவில் மூன்றில் ஒருவருக்கு அல்லது 38 சதவீதம் பேருக்கு மது அல்லாத கொழுப்பு கல்லீரல் பாதிப்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியாவில் கல்லீரல் நோய்க்கு மது அருந்துவது ஒர் பொதுவான காரணமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதிகளவில் மது அருந்துவது “ஆல்கஹாலிக் ஹெபடைடிஸ்” க்கு வழிவகுக்கும். இது கல்லீரல் புற்றுநோய் மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும். மறுபுறம் ஹைபடைடிஸ்க்கு சரியான மருந்து இல்லாததால், கல்லீரல் செயலிழப்பால் 67 சதவீதம் உயிரிழப்பு ஏற்படுகிறது.
ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் பாதிப்பு, பெரியவர்களுக்கு மட்டுமின்றி, 35 சதவீதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இருக்கிறது. கொழுப்பு கல்லீரல் பாதிப்பை பொறுத்தவரை ஆரம்ப நிலையில், பெரிய அறிகுறிகள் இருக்காது. ஆனால் பாதிப்பு அதிகரிக்கும் போது சிலருக்கு சிறுநீரக பிரச்னையை ஏற்படுத்தும். ஸ்டீடோஹைபடைடிஸ் எனப்படும் மது அல்லாத கொழுப்பு கல்லீரல் பாதிப்புக்கு, துரித உணவுகள் எடுத்து கொள்வது, பழங்கள், காய்கறிகள் உண்ணாமல் தவிர்ப்பது, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே முக்கிய காரணமாகும். இது நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்ற வளர்சிதை மாற்ற நோய்களின் இணை நோயாக கருதப்படுகிறது.
கொழுப்பு கல்லீரலுக்கு தற்போது அங்கீகரிக்கப்பட்ட மருந்து சிகிச்சை இல்லை என்றாலும், இந்த நிலை மீளக்கூடியது. இந்த நோய் பாதிப்பை வெல்வதற்கான ஒரே வழி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது மட்டுமே. உடல் பருமனை குறைத்து, சரிவிகித உணவு எடுத்து கொள்வது, சர்க்கரை உணவுகளை உட்கொள்வதை குறைத்து கொள்வதுடன், உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.