மைனரின் லிவிங் டு கெதர் உறவு சட்டவிரோதமானது மற்றும் ஒழுக்கக்கேடானது என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
17 வயது சிறுவன் மற்றும் அவரது லிவ் இன் பார்ட்னர் (வயது 19) ஆகியோர் தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது. லிவ்-இன் உறவை கருதுவதற்கு பல நிபந்தனைகள் உள்ளன. ஒரு குழந்தை லிவ்-இன் உறவை கொண்டிருக்க முடியாது. இது ஒழுக்கக்கேடான செயல் மட்டுமல்ல, சட்டவிரோதமானதும் ஆகும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சிறுமியை கடத்தியதாக சிறுவன் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்த வழக்கில் சிறுவனைக் கைது செய்யக்கூடாது என்றும் இருவரும் கூட்டாக மனு தாக்கல் செய்துள்ளனர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிறுவன் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. 18 வயதிற்குட்பட்ட சிறுவன், அவரை விட வயது பெரிய பெண்ணுடன் லிவ்-இன் உறவில் இருப்பதை பாதுகாப்பாக கருத முடியாது. எனவே, அவர் மீதான குற்றவியல் வழக்கை ரத்து செய்ய உரிமைக்கோர முடியாது என்றும் இது சட்டவிரோதமானது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.