பொன்னேரி அருகே தன்னை விட வயது அதிக வயதுள்ள பெண்ணை காதலித்து ஏமாற்றிய மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே தும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன் (33). இவர், சென்னையில் கார் மெக்கானிக் கடை வைத்துள்ளார். இந்நிலையில், இந்தி கற்றுக் கொள்வதற்காக கடந்த 2012ஆம் ஆண்டு எண்ணூரில் உள்ள இந்தி டியூஷன் பயிற்சிக்குச் சென்றுள்ளார். அப்போது இந்தி டியூஷன் டீச்சராக பொன்னேரியைச் சேர்ந்த 39 வயது பெண்ணை இருந்துள்ளார். இந்நிலையில், யோகேஸ்வரனுக்கும், டியூஷன் டீச்சருக்கும் காதல் மலர்ந்துள்ளது. மேலும், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அவருடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார் யோகேஸ்வரன்.
இந்நிலையில் தான், தன்னைவிட அந்த பெண்ணுக்கு 6 வயது அதிகம் என்பதால், அவரை திருமணம் செய்து கொள்ள யோகேஸ்வரன் மறுத்துள்ளார். அதேசமயம், யோகேஸ்வரனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனையறிந்த அந்த பெண், பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் யோகேஸ்வரன் மீது புகாரளித்தார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, உல்லாசமாக இருந்துவிட்டு, இப்போது வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என புகாரில் கூறியிருந்தார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், யோகேஸ்வரனை அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், யோகேஸ்வரனுக்கு நாளை மறுநாள் வேறொரு பெண்ணுடன் நடைபெறவிருந்த திருமணமும் நிறுத்தப்பட்டது.