இங்கிலாந்து நாட்டின், லண்டன் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் ஒரு செவிலியர் பணியாற்றி வந்தார். அந்த மருத்துவமனையில் அவர் ஏழு குழந்தைகளை கொடூரமான முறையில் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் அவர் தன்னுடைய டைரி ஒன்றில் நான் ஒரு பேய் என்று எழுதி வைத்திருக்கிறார் என்ற தகவலும் கிடைத்திருக்கிறது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த செவிலியர் ஆன லூசிலெட்பி (33) என்பவர் இங்கிலாந்தில் உள்ள செஸ்டர் பகுதியில், உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 2015 ஆம் வருடம் முதல், 2016 ஆம் வருடம் வரையில், அந்த மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த அந்த செவிலியர் ஏழு குழந்தைகளை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். கடந்த 2018 ஆம் வருடத்தில், ஜூலை மாதத்தில், பச்சிளம் குழந்தை ஒன்றை கொலை செய்ய முயற்சி செய்தபோது சக மருத்துவர்களுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அந்த சந்தேகத்தின் அடிப்படையில், காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதன் பிறகு தான் அந்த செவிலியரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியானது.
அதாவது, குழந்தைகளின் கைகளில் ஊசியின் மூலமாக காற்றை ஏற்றி கொலை செய்வது, இன்சுலின் செலுத்தி கொலை செய்வது என்று கொடூரமான முறைகளில், அவர் இந்த கொலைகளை செய்திருக்கிறார். இரட்டை குழந்தைகள் மற்றும் முன்கூட்டியே பிறக்கும் குழந்தைகளை குறிவைத்து அவர் கொலை செய்திருக்கிறார்.
அவர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த போது, காவல்துறையினர் அந்த செவிலியரின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில், பல்வேறு ஆவணங்களை காவல்துறையினர் கைப்பற்றி இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, ஒரு ஆவணத்தில், நான் ஒரு பேய், நானே கொலை செய்தேன், நான் மிகவும் மோசமான நபர் என்று எழுதி வைத்திருக்கிறார். இந்த கோப்புகளை காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
வழக்கு விசாரணையின் போது, தன் மீதான குற்றத்தை அந்த செவிலியர் முற்றிலுமாக மறுத்துள்ளார். ஆனாலும், அந்த செவிலியர் பணியில் இருந்த போது தான், குழந்தைகள் மரணம் அதிகரித்ததாக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது நீதிமன்ற விசாரணையின் போது, தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை அவர் ஒருபோதும் ஒப்புக் கொள்ளவில்லை. பாதுகாப்பாக இருப்பார்கள் என கருதி தான் குழந்தைகளை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் பெற்றோர்கள். ஆனால், அவர்களுடைய நம்பிக்கைக்கு செய்யப்பட்ட துரோகம் இது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்துள்ளார்.
22 நாட்கள் இந்த வழக்கின் வாதங்கள் நடந்த சூழ்நிலையில், அந்த செவிலியரின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம், அவரை குற்றவாளி என்று தெரிவித்தது. 7 குழந்தைகளை கொலை செய்த குற்றச்சாட்டில், ஆறு குழந்தைகளை கொலை செய்தது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தரப்பில் கூறப்பட்டது. குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருக்கின்ற அந்த செவிலியரின் தண்டனை விபரம், நாளை அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.