தி லான்செட் சுவாச மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், புகைபிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. காற்று மாசுபாடு காரணமாக இந்த புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் (IARC) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் அடங்குவர்.
இந்த ஆய்வுக்காக, ஆராய்ச்சியாளர்கள் 4 துணை வகைகளுக்கு தேசிய அளவிலான நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகளை மதிப்பிடுவதற்காக குளோபல் புற்றுநோய் ஆய்வகம் 2022 தரவுத்தொகுப்பிலிருந்து தரவுகளை பகுப்பாய்வு செய்தனர்; அடினோகார்சினோமா, ஸ்குவாமஸ் செல் கார்சினோமா, சிறிய மற்றும் பெரிய செல் கார்சினோமா ஆகிய புற்றுநோய் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
சளி மற்றும் செரிமானம் போன்ற திரவங்களை உற்பத்தி செய்யும் சுரப்பிகளில் தொடங்கும் புற்றுநோயான அடினோகார்சினோமா ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரிடமும் ஆதிக்கம் செலுத்தும் துணை வகையாக மாறியுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். நுரையீரல் புற்றுநோயின் துணை வகை 2022 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் புகைபிடிக்காதவர்களிடையே 53-70 சதவீத நுரையீரல் புற்றுநோய் பாதிப்புக்கு காரணமாக இருப்பதும் கண்டறியப்பட்டது.
நுரையீரல் புற்றுநோயின் பிற துணை வகைகளுடன் ஒப்பிடும்போது, அடினோகார்சினோமா வகை புற்றுநோய்க்கும் சிகரெட் புகைப்பதற்கும் குறைவாகவே தொடர்புடையதாகக் கருதப்படுகிறது என்று ஆய்வின் ஆசிரியர்கள் தெரிவித்தனர். “உலகளவில் பல நாடுகளில் புகைபிடிக்கும் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால், புகை பிடிக்காதவர்களிடமும் நுரையீரல் புற்றுநோயின் விகிதம் அதிகரித்துள்ளது” என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
IARC இன் புற்றுநோய் கண்காணிப்புக் கிளையின் தலைவரும் முதன்மை ஆசிரியருமான ஃப்ரெடி பிரே இதுகுறித்து பேசிய போது “புகைபிடிக்கும் முறைகளில் ஏற்படும் மாற்றங்களும் காற்று மாசுபாட்டின் வெளிப்பாடும் இன்று நாம் காணும் துணை வகையின் அடிப்படையில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகளின் மாறிவரும் ஆபத்து காரணிகளில் ஒன்றாக மாறிஉள்ளது.” என்று கூறினார்.
புகைபிடிக்காதவர்களில் நுரையீரல் புற்றுநோய் உலகளவில் புற்றுநோய் தொடர்பான இறப்புக்கான 5வது முக்கிய காரணமாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது பெரும்பாலும் பெண்கள் மற்றும் ஆசிய மக்களிடையேயும் நிகழ்கிறது என்று ஆய்வின் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
“2022 ஆம் ஆண்டில், உலகளவில் பெண்களிடையே 908 630 புதிய நுரையீரல் புற்றுநோய்கள் இருப்பதாக நாங்கள் மதிப்பிட்டுள்ளோம், அவற்றில் 541 971 (59.7 சதவீதம்) அடினோகார்சினோமா என்ற துணை வகை புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது” என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
எனவே புற்றுநோயால் அதிக ஆபத்துள்ள மக்களுக்கு ஏற்றவாறு புகையிலை மற்றும் காற்று மாசுபாடு கட்டுப்பாட்டு உத்திகளை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று புற்றுநோய் தடுப்பு நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
Read More : அதிகமா உப்பு போட்டு சாப்பிடுவீங்களா..? அது இதயம், சிறுநீரகத்திற்கு எவ்வளவு ஆபத்துன்னு தெரியுமா..?