கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு , அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டு, திட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்த 1.65 கோடி மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். திட்டத்தின் மூலம் தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக்கணக்குக்கு ரூ.1,000 அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களின் நிலைகுறித்தகுறுஞ்செய்தி, விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும். இ-சேவை மையங்களை தவிர்த்து நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள வட்டாட்சியர் அல்லது கோட்டாட்சியர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று மேல்முறையீடு செய்யலாம்.
தமிழக அரசு சார்பில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை மறைத்து பலர் மீண்டும் மேல்முறையீடு செய்வதாக சொல்லப்படுகிறது. இந்தத் திட்டம் உண்மையிலேயே தேவைப்படும் மகளிருக்கானதாக இருக்க வேண்டும் என்ற நோக்குடன் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் ஏமாற்றினால் அரசுக்கு நஷ்டத்தையே ஏற்படுத்தும் என்பதால் உண்மையான தகவலை மட்டும் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.