மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டப்பேரவையில் விவாத நேரத்தின் போது நாய்களைப் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி சிக்கலில் மாட்டியிருக்கிறார் அங்குள்ள எம்.எல்.ஏ. மகாராஷ்டிரா மாநிலத்தின் அசல்பூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ஓம் பிரகாஷ் பாபா ராவ். இவர் தொடர்ந்து நான்கு சட்டமன்றத் தேர்தலிலும் அந்தத் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் நேற்று சட்டமன்ற கூட்டத்தில் பேசிய கருத்து சர்ச்சையாக இருக்கிறது.
மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் விவாத நேரத்தின் போது அதிகரித்து வரும் தெரு நாய் பிரச்சனை பற்றி சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதம் செய்தனர். அப்போது பேசிய பாபா ராவ் கடு அசாம் மாநிலத்தில் நாய்களை இறைச்சிக்காக வெட்டுவதாகவும் அங்கு இறைச்சிக்காக வெட்டப்படும் நாய் 8000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் நாய்களை கட்டுப்படுத்த அவற்றை அசாமிற்கு இறைச்சிக்காக அனுப்பலாம் என தனது ஆலோசனையை தெரிவித்திருக்கிறார். இந்த விஷயம் தற்போது பெரிய சர்ச்சையாக வெடித்து இருக்கிறது. இவரது கருத்திற்கு விலங்குகள் நல ஆர்வலர்களும் வளர்ப்பு பிராணி ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இவரது ஆலோசனை ஒரு மனிதாபிமானமற்ற செயல் எனவும் விமர்சித்து வருகின்றனர்.