அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், ஓபிஎஸ் உள்ளிட்டவர்களின் முக்கியமான வீடியோக்கள் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின் போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக முன்னாள் அமைச்சர்கள் பலர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களது வீடுகளில் சோதனையும் நடத்தினர். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தி.நகர் சட்டமன்ற தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வான சத்யா என்கிற சத்ய நாராயணன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2016-2021ஆம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.வாக இருந்த கால கட்டத்தில் ரூ.2.64 கோடி அளவு வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தி.நகர் சத்யாவின் வீடு உள்பட 16 இடங்களிலும், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம், கோவை என மொத்தம் 18 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக தெரிகிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓபிஎஸ் உள்ளிட்ட மிக முக்கிய விஐபிக்கள் குறித்த வீடியோக்களும் சோதனையில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. சோதனைகள் முடிவடைந்த பிறகு லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் இது குறித்த தகவல்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.