கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் 47 வயதான பெஞ்சமின். வெளிநாட்டில் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வரும் இவருக்கு, 45 வயதான சுனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில், இவர்களுக்கு தற்போது வரை குழந்தைகள் இல்லை. இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது மனைவி ஆசைப்பட்ட காரணத்தால், பெஞ்சமின் தனது சொந்த ஊரிலிருந்த வீட்டை விட்டு, மணக்காவிளை பகுதியில் புது வீடு ஒன்றை கட்டியுள்ளார்.
ஒரு கட்டத்தில், சுனிதாவின் நடவடிக்கையில் பெஞ்சமினுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டில் பெஞ்சமின் தனது மனைவியை தட்டி கேட்டுள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து சுனிதா வீட்டிலிருந்து திடீரென மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுனிதாவின் உறவினர்கள், அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் சுனிதா கிடைக்காததால் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளிநாட்டில் இருந்து வந்த பெஞ்சமின் தனது மனைவியை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில், பெஞ்சமின் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, அவரை உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர் இறப்பதற்கு முன்பு பதிவு செய்த வீடியோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அந்த வீடியோவில் அவர் பேசும் போது, “போலீஸ் சூப்பிரண்டு ஐயா அவர்களே, நான் 19 வருடங்களாக எனது மனைவியை ராணி மாதிரி வைத்திருந்தேன். ஆனால் அவள் என்னை பிரிந்து கள்ளக்காதலனுடன் சென்று விட்டாள். அந்த கள்ளக்காதலனை விட்டு விடாதீர்கள்.
எனது மனைவியின் உறவினர் மற்றும் வக்கீல் என்னை மிரட்டினார்கள். அவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுப்பதை நான் மேலே இருந்து பார்ப்பேன். என் மனைவியின் கள்ளக்காதலனை மட்டும் தயவு செய்து சும்மா விடாதீர்கள்” என்று கூறி அவர் கதறி கதறி நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுகிறார். இதையடுத்து, காவல் துறையினர் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.