திருச்சூர் மாவட்டம் போத்தா பகுதியில் உள்ள பெடரல் வங்கிக் கிளையில், கடந்த வெள்ளிக்கிழமை மதியம் மர்மநபர் ஒருவர் ஸ்கூட்டரில் நோட்டம் விட்டபடி வங்கிக்குள் நுழைந்துள்ளார். உணவு இடைவேளை என்பதால் வங்கியில் கூட்டம் குறைவாக இருந்துள்ளது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த மர்மநபர், அங்கிருந்த 2 ஊழியர்களை கத்தி முனையில் மிரட்டி அவர்களை கழிப்பறைக்குள் வைத்து பூட்டியுள்ளார்.
பின்னர், நாற்காலியை வைத்து பணம் இருந்த கவுண்டரின் கண்ணாடி உடைத்து 15 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு தப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியில் உறைந்துப் போன வங்கி ஊழியர்கள், சம்பவம் குறித்து உடனடியாக சாலக்குடி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
ஆனால் மர்மநபர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவரது முகம் தெரியவில்லை. பணத்துடன் வெளியேறிய அந்த நபர் தனது ஸ்கூட்டரில் தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. ஆனால் அந்த ஸ்கூட்டரின் பதிவெண்ணும் போலி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட அந்த ஸ்கூட்டரின் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்துள்ளனர்.
அப்போது ரிஜோ ஆண்டனி என்ற நபர் ஒருவர், வங்கிக்கு எதிரே உள்ள தேவாலயத்திற்கு, அதே ஸ்கூட்டரில் பல முறை வந்து சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து, ரிஜோ ஆண்டனியை கைது செய்த போலீசார், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் தான் கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், அவர் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
வங்கிக்கு எதிரே உள்ள தேவாலயத்திற்குச் செல்வதைப் போல, வங்கியின் நடவடிக்கைகளைக் ரிஜோ தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார். பின்னர் வாடிக்கையாளர்கள் குறைவாக இருக்கும் நேரத்தைக் கணக்கிட்டு, கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காகப் போலி வாகன எண் ஒன்றை உருவாக்கி தனது ஸ்கூட்டரில் பொருத்தியுள்ளார். ரிஜோ ஆண்டனி, வேலையில்லாமல் ஊரை சுற்றி வருகிறார்.
இதனால் வெளிநாட்டில் வேலை செய்யும் அவரது மனைவி, தனது கணவருக்கு பணம் அனுப்பி வருகிறார். மனைவி அனுப்பிய பணத்தை ஆடம்பரமாக செலவு செய்து வந்த நிலையில், ரிஜோவிற்கு சுமார் 10 லட்சம் ரூபாய் வரை கடனாகியிருக்கிறது. அடுத்த மாதம் அவரது மனைவி வீடு திரும்பவிருந்த நிலையில், மனைவி வந்தால் கேள்வி கேப்பார் என்று பயந்துள்ளார்.
இதனால் தனது மனைவி வருவதற்க்குள் அனைத்து கடனையும் அடைத்து விட வேண்டும் என ரிஜோ முடிவு செய்துள்ளார். இதையடுத்து, அவர், வங்கி கேஷ் கவுண்டரில் இருந்த 45 லட்சம் ரூபாயில், தனக்குத் தேவையான 15 லட்சத்தை மட்டும் ரிஜோ எடுத்துச் சென்றுள்ளார். இந்நிலையில், போலீசார் தற்போது ரிஜோவை சிறையில் அடைத்துள்ளனர்.