பேஸ்புக் மூலம் காதல் வலை விரித்து இளைஞர் கடத்தப்பட்ட சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ராஜம்பேட் மண்டலத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருக்கு கடப்பா பகுதியைச் சேர்ந்த சுதா ராணி என்ற பெண் பேஸ்புக் மூலம் அறிமுகமாக இருக்கிறார். நாளடைவில் இவர்களது பழக்கம் நெருக்கமாக இருக்கிறது. செல்போன் எண்களை பரிமாறி இருவரும் நெருக்கமாக பேசி வந்திருக்கின்றனர். மேலும் அடிக்கடி வீடியோ கால் பேசி வந்ததாகவும் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து வெங்கடேஷ் ஏமாற்றி பணம் பறிக்க திட்டமிட்ட சுதா ராணி கடப்பாவிற்கு வந்தால் உல்லாசமாக இருக்கலாம் எனக்கூதி அவரது ஆசையை தூண்டி இருக்கிறார். இதனை நம்பி வெங்கடேஷ் கடப்பா சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து சுதா ராணியும், வெங்கடேஷும் தனிமையான இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு மறைந்திருந்த சுதா ராணியின் நண்பர்களான நவீன் மற்றும் பிரதாப் இருவரும் வெங்கடேஷை அடித்து உதைத்து கடத்திச் சென்று இருக்கின்றனர்.
அங்கு ஒரு வீட்டில் வெங்கடேஷ் அடைத்து வைத்து அவரது குடும்பத்தாரிடம் பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார்கள் சுதாராணி மற்றும் அவரது நண்பர்கள். இதனைத் தொடர்ந்து வெங்கடேஷ் குடும்பத்தார் காவல்துறையினை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். அவர்களது புகாரின் பேரில் நடவடிக்கையில் இறங்கிய காவல்துறையினர் வெங்கடேஷ் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரை மீட்டதோடு சுதா ராணி மற்றும் அவரது நண்பர்களான நவீன் மற்றும் பிரதாப் ஆகியோரை கைது செய்தனர்.