சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் அசோக். தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவரது மனைவி, தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அசோக் மனைவியின் செல்போனுக்கு, இரவில் யாரென்று தெரியாத ஒருவர் வாட்ஸ் ஆஃப்பிற்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், ஹாய், நான் உங்கள் பள்ளியில் பணியாற்றும் உடற்பயிற்சி ஆசிரியரின் நண்பர் என்று மெசேஜ் இருந்துள்ளது. பின்னர், அதே எண்ணில் இருந்து ஆபாசமான மெசேஜ் வர ஆரம்பித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண் பணி புரியும் பள்ளியில் இருக்கும் ஆசிரியரோடு இணைத்து ஆபாச படங்களை அனுப்பி மனரீதியாக அந்த பெண்ணை துன்புறுத்தியுள்ளனர்.
இதையடுத்து, சம்பவம் குறித்து அசோக் அண்ணா நகர் சைபர் காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்துள்ளார். மேலும், இது தொடர்பாக சென்னை அண்ணாநகர் சைபர் கிரைம் போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இது போன்ற மெசேஜ், பெண்ணின் செல்போன் எண்ணிற்கு மட்டுமல்லாது பெண்ணின் கணவர் மற்றும் பெண்ணின் மாமனார் உள்ளிட்டோருக்கு வந்துள்ளது. இதையடுத்து, போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போன் நம்பரை மாற்றி சந்தேகப்படும் நபர்களுக்கு மட்டும் புதிய எண்ணை கொடுக்கும் படி அறிவுறுத்தியுள்ளனர். அதன் படி அந்த பெண்ணும் செய்துள்ளார். அப்பொழுது தான் வீட்டின் அருகிலேயே குடும்ப நண்பர் போல் பழகிய தனது தோழியின் கணவர் விஜயராஜ், இது போன்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து விஜயராஜ் கூறும் போது, குடும்ப நண்பராக பழகிய பெண், யாருடனும் பழகக் கூடாது என்று நினைத்துள்ளார்.
இதனால், வேலையை விட்டு நிறுத்தி வீட்டிலேயே இருக்க வைத்து விட்டால், தன்னோடு மட்டும் பழகுவார் என்ற எண்ணத்தில் ஆபாசமாக சித்தரித்து அவதூறு பரப்பியதாக கூறியுள்ளார். மேலும், இப்படி செய்வதால் வீட்டில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை வேலைக்கு அனுப்பாமல் நிறுத்தி விடுவார்கள் என்று நினைத்துள்ளார். “பக்கத்து வீட்டுக்காரி என்கூட மட்டும் தான் பழகனும்” என்ற எண்ணத்தில் விஜயராஜ் இத்தனை காரியங்களையும் செய்துள்ளார். இதனையடுத்து, விஜயராஜன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
Read more: வாடகை வீட்டில் இருந்தவர் கொலை; கள்ளக்காதலிக்காக ஹவுஸ் ஓனர் செய்த கொடூர சம்பவங்கள்..