Manipur: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என, மெய்டி சமூகத்தினர் நீண்டகாலமாக கோரி வருகின்றனர். இதை வலியுறுத்தி, கடந்தாண்டு மே மாதத்தில், பழங்குடியினர் ஒற்றுமை பேரணியை மெய்டி சமூகத்தினர் நடத்தினர்.
அப்போது, மெய்டி மற்றும் கூகி சமூகத்தினர் இடையே மோதல் வெடித்தது. இது தொடர்ந்து வன்முறை, கலவரமாக மாறியது. இதில், 220க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இது தவிர, ஆயிரக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்து உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் எடுத்த முயற்சிகளால் ஓரளவுக்கு அமைதி திரும்பினாலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, இரு சமூகத்தினர் இடையே அடிக்கடி மோதல், வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இதற்கிடையே, ஆயுதம் ஏந்திய போராட்டக்காரர்கள், மெய்டி சமூகத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள், மூன்று குழந்தைகளைக் கடத்திச் சென்றனர்.
இதையடுத்து, மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. வன்முறையைத் தடுக்க பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்தனர். இந்த நேரத்தில், கடத்திச் செல்லப்பட்ட ஆறு பேரின் உடல்களும் சமீபத்தில் மீட்கப்பட்டன. இதனால், மெய்டி சமூகத்தினர் ஆத்திரமடைந்தனர்.
இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், ஏழு மாவட்டங்களில், இன்டர்நெட் சேவை தடை செய்யப்பட்டது. இருப்பினும், இம்பால் பள்ளத்தாக்கு பகுதியில் வன்முறை சம்பவங்களில் அவர்கள் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவில் துவங்கி, நேற்று அதிகாலை வரை மீண்டும் வன்முறைகளில் மெய்டி சமூகத்தினர் ஈடுபட்டனர். ஒரு மூத்த அமைச்சர் உட்பட, பா.ஜ.,வைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.,க்கள், ஒரு காங்., – எம்.எல்.ஏ.,வின் வீடுகளில் தாக்குதல் நடத்தினர். ஆத்திரம் அடங்காத அவர்கள், அந்த வீடுகளுக்கு தீ வைத்தனர். தீயணைப்புப் படையினர் போராடி தீயை அணைத்தனர். அந்த வீடுகளில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், மணிப்பூரில் நடக்கும் வன்முறைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஆளும் பா.ஜ., கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய மக்கள் கட்சி, அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.