வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் அமைதியை கொண்டு வரும் நடவடிக்கையாக அமைதிக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. மணிப்பூர் ஆளுநர் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த அமைதிக் குழுவில், மாநிலத்தின் முதலமைச்சர் மற்றும் சில அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், தலைவர்கள் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.மாநிலத்தின் பல்வேறு இனக்குழுக்களிடையே சமாதான நடவடிக்கை மூலம் அமைதியைக் காக்கவும், விவாதங்களை நடத்தவும், நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் இந்த அமைதிக் குழு முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இனக்குழுக்களுக்களிடையே சமூக ஒருங்கிணைப்பு, பரஸ்பர புரிதல் மற்றும் சுமுகமான உறவை மேற்கொள்ள வேண்டும்.மணிப்பூரில், பழங்குடியினர் அல்லாத பெரும்பான்மை கொண்ட மெய்தி மக்களுக்கும், பழங்குடியினரான குக்கிகள், நாகாக்கள் என இரண்டு இன சமூகத்தினரிடையே ஏற்பட்ட வன்முறை வெடித்தது.
மெய்தி சமூகத்திற்கு, பட்டியல் பழங்குடியின இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து மணிப்பூர் அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் (ATSUM) அழைப்பு விடுத்த “பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு” நிகழ்ச்சியின் போது சுராசந்த்பூர் மாவட்டத்தில் இந்த வன்முறைகள் தொடங்கியது. இந்த வன்முறைச் சம்பவங்களில் 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 300க்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்துள்ளனர்.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மே 29 முதல் ஜூன் 1 வரை மணிப்பூர் மாநிலத்திற்குச் சென்றிருந்தார். அங்கு நிலைமையை ஆய்வு செய்த பின்னர், அனைத்துப் பிரிவினரின் பிரதிநிதிகளும் உள்ளடக்கிய அமைதிக் குழு நியமிக்கப்படும் என்றும் அறிவித்தார்.இதற்கிடையே, கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அஜய் லம்பா தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.