மதுபான கொள்கை முறைகேடு புகாரில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்துள்ளது.
தேசிய தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு டெல்லி மாநில அரசு, மதுபானக் கொள்கையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், சுமார் 800 நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் இரண்டாம் கட்டமாக மணீஷ் சிசோடியா டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், விளக்கம் திருப்திகரமாக இல்லை என கூறி கைது செய்யப்பட்டார். அவரின் கைதுக்கு ஆம் ஆத்மி தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், இது ஜனநாயகத்தின் கருப்பு நாள் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.