கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் வசித்து வருபவர் சபின். டெம்போ வேன் ஓட்டி வரும் இவர், அந்த பகுதியில் உள்ள இளம்பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். வேன் டிரைவரைக் காதலிப்பதற்கு பெண்ணின் வீட்டார் சம்மதிக்காமல் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில், சபினின் காதலியின் உறவுக்கார பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. திருமணத்திற்கு சபினின் காதலியும் சென்றுள்ளார். திருமண வீடு என்பதாலும், பெற்றோர் உடனிருந்ததாலும் சபினின் காதலி செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்து வைத்துள்ளார். உறவினர்கள் மண்டபத்தில் குவிந்திருந்தனர். அப்போது போதையில் தள்ளாடியபடியே சபின் திருமண மண்டபத்திற்குள் நுழைந்து, தனது காதலிக்கு தான் ரகசியமாக தனக்கு தெரியாமல் அவசர அவசரமாக திருமணம் ஏற்பாடுகள் நடைபெறுவதாக நினைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
அதன் பின்னர், தனது காதலியின் பெற்றோரிடத்திலும் வாக்குவாதம் செய்துள்ளார். போதையில் எவ்வளவு எடுத்துக் கூறியும் கேட்காமல் சபின் தொடர்ந்து ரகளையில் ஈடுபட, வேறு வழியில்லாமல் மணப்பெண்ணின் தந்தை போலீசாருக்கு தகவல் கொடுத்த பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சபினை எச்சரித்தனர். அதன் பின்னரும், அடங்காமல் போலீசாரிடமும் போதை தலைக்கேறிய நிலையில், சபீன்வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பெண்ணின் பெற்றோர் போலீசாரிடம் புகாரளித்த நிலையில், சபின் மீது வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சபினை போலீசார் கைது செய்தனர்.