ஆப்பிள் ஐபோன் தொழி்ற்சாலையான ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தில் திருமணமான பெண்கள் பணியாற்ற அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஆப்பிள் ஐபோன் தொழி்ற்சாலையான ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தில் திருமணமான பெண்கள் பணியாற்ற அனுமதிப்பதில்லை என்ற ஊடகச் செய்திகளை மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. இந்த செய்திகளின் பின்னணியில், விவரமான அறிக்கையை அளிக்குமாறு தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறையிடமிருந்து மத்திய அமைச்சகம் கோரியுள்ளது.
ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் போது, பாகுபாடு காட்டக்கூடாது என 1976-ம் ஆண்டின் சமவேலைக்கு சமஊதியம் சட்டத்தின் பிரிவு-5 தெளிவாக தெரிவிக்கிறது. இந்தச் சட்டத்தின் அம்சங்களை அமல்படுத்துதல் மற்றும் நிர்வகித்தலுக்கு உரிய அதிகாரம் கொண்டது மாநில அரசு என்பதால், அதனிடமிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளது.
அதே சமயம், உண்மை நிலை அறிக்கையை மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்துக்கு அளிக்குமாறு பிராந்திய தலைமை தொழிலாளர் நல ஆணையர் அலுவலகமும் பணிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.