இன்று முதல் டிசம்பர் மாதம் வரை அனைத்து ஞாயிற்றுக்கிழமை நாட்களிலும் 1,000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளன
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம்; வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழக சுகாதாரத் துறை சார்பில் மழைக்கால நோய்களுக்காக இன்று முதல் டிசம்பர் மாதம் வரை அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் 1,000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளன.
பருவமழை பெய்வதால், தூக்கி எறியப்பட்ட பழைய பாத்திரங்கள் பொருட்கள் மற்றும் பூந்தொட்டிகளில் நீர் தேங்கி டெங்கு பரப்பும் கொசுக்கள் வளர காரணமாகி விடுகிறது. தேவையற்ற பொருட்களான தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், பழைய பொம்மைகள், பாட்டில்கள், உடைந்த பாத்திரங்கள் போன்ற பொருட்களை வீட்டை சுற்றி போட்டு வைப்பதால் டெங்கு பரப்பும் சூழலை நாம் தோற்றுவித்து விடுகிறோம். வீட்டை சுற்றிலும் பழைய பொருட்கள், தேவையில்லாத நீர் தேக்க பாத்திரங்கள் வைத்திருப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.
வரும் நவம்பர் 4-ம் தேதி ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் தொடங்கி வைக்கப்படவுள்ளது. மேலும் கர்ப்பம் தரித்த தாய்மார்களுக்கு நிதி உதவி திட்டத்தின் கீழ் முதல் தவணையாக 4 முதல் 5 மாதம் அடையும் பொழுது ரூ.1,000 வழங்கப்படும். 2-வது தவணையாக 5 முதல் 6 மாதம் ரூ.1,000, மூன்றாம் தவணையாக 9 மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. அதன்பிறகு குழந்தை பிறந்த பிறகும் மொத்தம் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் ரூ.5,000 வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.