சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இந்தியாவில் புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலனவர்கள் கேரளாவை சேர்ந்தவர்களாக உள்ளனர். கேரளாவில் 79 வயது மூதாட்டி ஒருவருக்கு உருமாறிய ‘ஜே என் 1’ வகை கொரோனா தொற்று 2 வாரத்திற்கு முன் கண்டறியப்பட்டது. தற்போது வரை கேரளாவில் 1324 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் 79 வயது மூதாட்டியை தவிர, எத்தனை பேர் உருமாறிய ‘ஜே என் 1’ வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கண்டறியும் பரிசோதனைகளை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை சாதாரண காய்ச்சல், சளி, தொடர் இருமல் மூலம் உடல், எலும்பு மூட்டுகளில் வலியுடன் உருவான காய்ச்சலிலும், தொண்டை கரகரப்பில் பாதிப்படைந்தோரை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அதில் தினந்தோறும் 8 நாட்களுக்கு மேல் காய்ச்சல், தொடர் இருமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்களை கண்காணித்து, சராசரியாக நாள் ஒன்றுக்கு 5 பேர் வீதம் கடந்த 2 மாதங்களில் 300 பேரின் உமிழ்நீர், சளி மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன.
இதில் எவ்வித கூடுதல் பாதிப்பு இல்லாததால், புதுவித கொரோனா பரவல் இல்லை. எனவே,பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை என தேனி அரசு மருத்துவக்கல்லுாரி முதல்வர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கொரோனா பாதிப்பு புதிய வகை உருவாறிய கொரோனா தொற்று எதுவும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் பொது மக்கள், பள்ளி, கல்லுாரிகளில் 5 பேருக்கு மேல் கூடுதலாக கூட்டம் கூட்டக் கூடாது எனவும், முகக்கவசம் அணிந்து கொள்ளவும், கைகளை அடிக்கடி சோப்பால் கழுவிட விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளாட்சி அமைப்புகளை அறிவுறுத்திட கலெக்டரிடம் பரிந்துரைத்துள்ளோம்.’, என்றார்.