திருப்பூர் மாவட்டம் அவிநாசி மங்கலம் சாலை பைபாஸ் அருகே சர்வீஸ் சாலையோரம் உள்ள நெடுஞ்சாலை மழை நீர் வடிகால் பாதையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற அவிநாசி போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்த பெண் அவிநாசி மங்கலம் சாலை பகுதியில் சுற்றிவந்த மனநலம் பாதித்த ஆதரவற்ற பெண் என்று தெரியவந்துள்ளது.
மேலும், அருகில் சர்வீஸ் சாலையில் மறுபுறம் இருந்த எலக்ட்ரிக்கல் கடை வாசலில் இருந்து சடலம் கிடந்த இடம் வரை இழுத்துச் சென்ற இரத்தக் கறை இருந்துள்ளது. இதனையடுத்து, போலீசார் அந்த எலக்ட்ரிகல் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், இரவு பூட்டியிருந்த எலக்ட்ரிக்கல் கடை வாசலில் தூங்கிய அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் தலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கல்லை தூக்கி போட்டு கொடூரமாக கொன்றுள்ளான்.
பின்னர், உடனடியாக பெண்ணின் காலை பிடித்து தரதரவென இழுத்துக்கொண்டு சாலையை கடந்து மறுபுறம் புதர் மறைவில் இருந்த நெடுஞ்சாலை மழைநீர் வடிகால் பாதைக்கு செல்வதும், பிறகு சுமார் அரை மணி நேரத்திற்கு பின் மீண்டும் எலக்ட்ரிக்கல் கடை முன் வந்து வேவு பார்த்துவிட்டு அங்கு அந்தப் பெண் வைத்திருந்த குடிநீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு வந்த வழியே செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம் புஸ்பபுதூர் பகுதியைச் சேர்ந்த ஹில்டன் என்பவன் மனநலம் பாதித்த பெண்னை கொலை செய்தது தெரியவந்தது. கடந்த இரு மாதங்களாக அவிநாசி பகுதியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வந்த ஹில்டன், ஆம்புலன்ஸை அதிவேகமாகவும், குடி போதையிலும் ஓட்டுவதாக புகார் வந்ததை அடுத்து ஆம்புலன்ஸ் உரிமையாளர் ஹில்டனை பணியிலிருந்து நீக்கியுள்ளார். பின்னர், அன்று இரவே மனநலம் பாதித்த பெண்னை அவன் கொடூரமாக கொலை செய்துள்ளான். பின்னர் அவிநாசி-கோவை பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்ற போது, சீனிவாசபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகி காயமடைந்தான்.
அப்பகுதி மக்கள் அவனை மீட்டு, திருமுருகன்பூண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் உள்ள கொலையாளி ஹில்டனுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.