மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருவதால், முழு கொள்ளளவான 120 அடியை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு பருவமழையால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் 1.10 லட்சம் கன அடிக்கும் அதிகமான நீர் திறந்து விடப்பட்டது. இதற்கிடையே, கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு 90 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை ஒகேனக்கல்லில் 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 90 ஆயிரம் கன அடியாக குறைந்தது.
இருப்பினும், 90 ஆயிரம் கன அடி தண்ணீர் வருவதால், ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், காவிரி கரைக்கு செல்லவும் 5-வது நாளாக தடை நீடிக்கிறது. மேலும், பிரதான அருவி செல்லும் நடைபாதை, மாமரத்து கடவு பரிசல் துறை, முதலைப்பண்ணை, ஆலம்பாடி உள்பட காவிரி கரையோர பகுதிகளில் வருவாய்துறையினர், ஒகேனக்கல் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒகேனக்கல் காவிரியில் இரு கரைகளையும் தொட்டபடி வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து சரிந்து வருகிறது. நேற்று காலை வினாடிக்கு 98 ஆயிரத்து 208 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று வினாடிக்கு 85 ஆயிரத்து 129 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவிலேயே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 105.81 அடியாக இருந்த நிலையில், இன்று 110.14 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் சுமார் 10 அடி உயர்ந்துள்ளது. இனி வரும் நாட்களில் இதே அளவு தண்ணீர் வந்தால் 3 நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளாவான 120 அடியை மீண்டும் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.