1972-ல் அதிமுகவை தொடங்கிய எம்.ஜி.ஆர் அக்கட்சியின் முதல் பொதுச்செயலாளராக இருந்தார்.. அவரை தொடர்ந்து 1978-ம் ஆண்டு நாவலர் நெடுஞ்செழியன் பொதுச் செயலாளராக தேர்வானார்.. பின்னர் 1980-ம் ஆண்டு, ப.உ. சண்முகம் பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.. 1984-ல் ராகவானந்தம் அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டர்.. 1986-ல் மீண்டும் எம்.ஜி.ஆர் பொதுச்செயலாளரானார்.. 1989ல் எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு ஜா. அணி, ஜெ. அணி என அதிமுக இரண்டாக பிரிந்தது.. பின்னர் மீண்டும் இணைந்த போது அதிமுக பொதுச்செயலாளராக முதல்முறையாக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார்.. 2016-ல் மறையும் வரை ஜெயலலிதா அந்த பதவியில் நீடித்தார்.. ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டிருந்தார்..

ஆனால் ஓபிஎஸ், இபிஎஸ் அணி அதிமுகவில் பிளவு ஏற்பட்டது.. இதை தொடர்ந்து ஓபிஎஸ், இபிஎஸ் மீண்டும் இணைந்த போது பொது செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. சசிகலாவை கட்சியை விட்டு நீக்கிய பின் ஓ. பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டு வந்தனர்..
ஆனால் 2019 மக்களவை தேர்தல், ஊரக மற்றும் உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டப்பேரவை தேர்தல் என சமீபத்தில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தொடர் தோல்வியை சந்தித்ததது.. அதிமுகவின் தோல்விக்கு இரட்டை தலைமை தான் காரணம் என்றும், மீண்டும் ஒற்றை தலைமையின் கீழ் அதிமுக செயல்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வந்தது.
இதை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது.. அதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.. ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.. இதை தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் முறையிட்டார். அங்கு அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை..பின்னர் உச்சநீதிமன்றத்தை ஓபிஎஸ் நாடினார்.. ஓபிஎஸ் தரப்பு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது..

இதனிடையே கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போதே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு வெளியானது.. இதனால் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராகவும் சென்னை உயர்நீதிமன்றத்தை ஓபிஎஸ் தரப்பு நாடியது.. ஓபிஎஸ் தரப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு, அவசர வழக்காக விசாரித்திருந்தார்.. அப்போது அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தலாம், ஆனால் முடிவுகளை வெளியிடக்கூடாது என்று ஏற்கனவே உத்தரவிட்டது..
இந்நிலையில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளரை எதிர்க்கும் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.. மேலும் ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்றும், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராவது தடையில்லை என்றும் தீர்ப்பு வழங்கி உள்ளார்..
இந்த சூழலில் தான் அதிமுக பொதுச் செயலாளராரக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் யாரும் மனு தாக்கல் செய்யாத நிலையில் எடப்பாடி பழனிச்சாமி போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.. இதனால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரிசையில் எடப்பாடி பழனிசாமியும் இடம்பெற்றுள்ளார்..