தகவல் தொழில்நுட்பத்துறைக்கு நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை என சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, ”கூடலூர் எம்.எல்.ஏ., “எனது தொகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்க ஒரு சிறு தகவல் தொழில்நுட்ப பூங்காவை அமைக்க அரசு முன்வருமா?” என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “நிதியும் மிகவும் குறைவாக ஒதுக்கப்படுகிறது.
டைடல் மற்றும் நியோ டைடல் பூங்காக்கள் தொழில்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன. எங்களிடம் அதிகாரம் இல்லை” என்றார். மேலும், “யாரிடம் நிதியும் அதிகாரமும் இருக்கிறதோ, அவரிடம் கேட்டால் செய்து தருவார்” என பேசினார். இதையடுத்து, குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, “இதெல்லாம் நீங்கள் உள்ளுக்குள் பேசி, முதல்வரிடம் முடிவெடுக்க வேண்டியது. பாசிட்டிவாக பதில் சொன்னால் உறுப்பினர்களுக்கு நன்றாக இருக்கும்” என அறிவுறுத்தினார்.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு, அமைச்சரவையில் நிதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. சக்தி வாய்ந்த அமைச்சர்களில் ஒருவராக பி.டி.ஆர். வலம் வந்து கொண்டிருந்த நிலயீல், கடந்த 2023ஆம் ஆண்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அப்போது, பிடிஆரிடம் இருந்த நிதித்துறை, தங்கம் தென்னரசு வசம் சென்றது. இதையடுத்து, அமைச்சர் பிடிஆருக்கு தகவல் தொழில்நுட்பத் துறை ஒதுக்கப்பட்டது.
இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமே அண்ணாமலை தான் என்று கூறப்படுகிறது. 2023 ஏப்ரல் மாதம் அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ பதிவுகள் காரணமாக இருக்கலாம் என சொல்லப்பட்டது. அந்த ஆடியோவில், பிடிஆர், முதலமைச்சர் ஸ்டாலினின் மகன் உதயநிதி மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் சட்டவிரோதமாக ரூ.30,000 கோடி சொத்து சேர்த்ததாக பேசுவது போல் இருந்தது. ஆனால், இந்த ஆடியோ உண்மையில்லை என பிடிஆர் மறுத்திருந்தார். இதன் எதிரொலியாகவே சிறிய துறையாக உள்ள தகவல் தொழில்நுட்பத்துறை பிடிஆருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.