2021ல் இந்தியாவில் சாலை விபத்துக்கள் என்ற ஆண்டறிக்கையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் துறை மூலம் பெறப்பட்ட தகவல்களின் படி, இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இந்த அறிக்கையின் படி, 2021ம் ஆண்டில் 4,12,432 எதிர்பாராத சாலை விபத்துக்கள் நடைபெற்றதில் 1,53,972 பேர் உயிரிழந்தனர். 3,84,448 பேர் காயமடைந்தனர். அதற்கு முந்தைய ஆண்டான 2020-ம் ஆண்டில் விபத்துக்களும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும், காயமுற்றவர்களும் குறைவாக இருந்தது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இதற்கு காரணமாகும். 2019-ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2021-ம் ஆண்டு சாலை விபத்துக்கள் 8.1 சதவீதம் குறைந்தது. காயமுற்றவர்களின் எண்ணிக்கை 14.8 சதவீதம் குறைந்தது. எனினும், 2019-ம் ஆண்டை விட, சாலை விபத்துக்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 2021-ம் ஆண்டு 1.9 சதவீதம் அதிகரித்தது.சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது.