ஜீன்ஸ் உடை அணியக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்த கணவரை கத்தியால் குத்தி மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் உள்ள ஜோர்பிதா என்ற கிராமத்தில் புஷ்பா ஹெம்ப்ரோம் என்ற பெண் வசித்து வருகிறார். இவர், கோபால்பூர் கிராமத்தில் நடைபெற்ற கண்காட்சியைப் பார்ப்பதற்காக ஜீன்ஸ் உடை அணிந்து சென்றிருக்கிறார். பின்னர், கண்காட்சி முடிந்து வீடு திரும்பிய அவரை கணவர் கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே ஜீன்ஸ் உடை அணிந்து சென்றது தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த மனைவி புஷ்பா, அங்கிருந்த கத்தியால் கணவனை சரமாரியாக குத்தியுள்ளார். கணவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் மனைவி புஷ்பாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.