நேற்று இரவு முதல்வர் மு.க. ஸ்டாலின் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் முதுகு வலியால் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். இது குறித்து மருத்துவமனை தரப்பில் முதுகுவலிக்கான வழக்கமான பரிசோதனையை தான் முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டார் என்று கூறப்பட்டது.
அவர் மருத்துவமனைக்கு வந்த காரணத்தால் அதிகப்படியான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் நாளை பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவில் ஸ்டாலின் கலந்து கொள்வதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் கிராமத்திற்கு செல்ல இருந்தார்.
அவரது உடல்நிலை பாதிப்பு காரணமாக அவர் குருபூஜைக்கு செல்வாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இத்தகைய சூழலில், அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஸ்டாலின் நாளை பசும்பொன் கிராமத்தில் நடக்கும் குருபூஜை விழாவில் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக அமைச்சர்கள் கே.என்.நேரு, துரைமுருகன் மற்றும் இ.பெரிய சாமி உள்ளிட்டவர் கலந்து கொண்டு குருபூஜை விழாவில் மரியாதை செலுத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது முதல்வர் ஸ்டாலின் சென்னை நந்தனத்தில் இருக்கும் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு நாளை மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அவருக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ள காரணத்தால் நீண்ட பயணங்களை தவிர்க்க சொல்லி மருத்துவர்கள் கூறியதனால் பசும்பொண்ணுக்கு செல்லாமல் முதல்வர் ஸ்டாலின் சென்னையிலேயே மரியாதை செலுத்துகிறார். அதன் பின்னர் வீட்டில் இருந்தபடி அரசு பணிகளை அவர் செய்வார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.