மகன் திருந்த வேண்டும் என்பதற்காக சாமிக்கு மாலை போட சொன்ன தாயை, குடிக்க பணம் கேட்டு குத்திக் கொன்ற மகன், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.
சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகர் 11-வது தெருவை சேர்ந்தவர் அப்புனு (50). காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கண்ணகி (45). இவர்களுக்கு அஜய் (எ) லூசு அஜய் (22) என்ற மகனும், அமலா என்ற மகளும் உள்ளனர். அமலா திருமணமாகி கணவருடன் இருக்கிறார். அஜய் ரயில்வே ஒப்பந்த பணிகளில் கூலி வேலை செய்து வந்த நிலையில், போதைக்கு அடிமையானதால் அவரை வேலையை விட்டு நிறுத்தியுள்ளனர். இதனால், வேலையில்லாமல் ஊர் சுற்றி வந்த அஜய், அடிக்கடி குடித்துவிட்டு தாயிடம் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தந்தை வேலைக்குச் சென்ற நிலையில், அஜய் அதிகாலை 4 மணிக்கு போதையில் தாயிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு தாய் மறுத்து கண்டித்ததால், ஆத்திரமடைந்த லூசு அஜய், கையில் வைத்திருந்த பீர்பாட்டிலை உடைத்து தாயின் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் கொடூரமாக குத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தில் அலறி துடித்த கண்ணகியை, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அஜயை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மகா சிவராத்திரி வருவதால், சிவபெருமானுக்கு வேண்டிக்கொண்டு மாலை அணிந்து, குடிக்காமல் இருக்கும்படி லூசு அஜயிடம் தாய் கண்ணகி கூறியுள்ளார். தாயின் பேச்சை கேட்டு லூசு அஜய்யும் சிவராத்திரிக்காக மாலை அணிந்து 2, 3 நாட்கள் குடிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில், மீண்டும் மாலை அணிந்து கொண்டே அவர் குடிக்க தொடங்கியதால், தாய் கண்ணகிக்கு கோபம் வந்து கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த லூசு அஜய் தாயை குத்தியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவர் கைது செய்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கண்ணனி, பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனர்.