பாலியல் வழக்கில் ஜகத்குரு முருகராஜேந்திர வித்யாபீட மடத்தின் தலைமைப் பீடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள ஜகத்குரு முருகராஜேந்திர வித்யாபீட மடத்தின் தலைமைப் பீடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு வியாழக்கிழமை இரவு கர்நாடக காவல்துறையால் கைது செய்யப்பட்டார். முன்னதாக, அவர் மைனர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்பட்டதை அடுத்து போக்சோ கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் சித்ரதுர்காவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அவரிடம் சரியான நடைமுறைப்படி மருத்துவ பரிசோதனை மற்றும் விசாரணை மேற்கொள்ளப்படும். மேலும் அவர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுவார்” என்று கர்நாடக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அலோக் குமார் தெரிவித்தார்.
பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக மட் ஹாஸ்டல் வார்டன் ராஷ்மியை கர்நாடக போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மைசூரு நகர காவல் துறையினர் சிவமூர்த்தி முருகா சரணருக்கு எதிராக இரண்டு சிறார்களின் சார்பில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது. புகாரின்படி, அந்த மடத்தால் நடத்தப்படும் பள்ளியில் படிக்கும் 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுமிகள் மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர் என புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.