‘தமிழ் மக்கள் போல் தமிழ் பேச வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்’ என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஜெயராமபுரத்தில் கொங்கு சமூக ஆன்மீக கல்வி கலாச்சாரம் மற்றும் தீரன் சின்னமலை கூட்டமைப்பு சார்பில் தீரன் சின்னமலை நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ”இந்த விழாவில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். தீரன் சின்னமலை சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர். சுதந்திரத்திற்காக தீரன் சின்னமலை உயிரைத் தியாகம் செய்தார். நமது நாட்டின் விடுதலைக்காக உயிரைக் கொடுத்தவர்களை மறக்கக்கூடாது. தீரன் சின்னமலைக்கு நன்றியாகச் சிறந்த பாரதத்தை உருவாக்க வேண்டும்.

மேலும் பேசிய அவர், தமிழ் பழமையான மொழி என்றும் அழகான மொழி என்றும் தெரிவித்தார். தமிழ் மக்கள் போல் தமிழ் பேச வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் எனத் தெரிவித்த அவர், ஒருநாள் தமிழில் பேசுவேன் எனத் தமிழில் கூறினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தவத்திரு சாந்தலிங்க மருதாசலம் அடிகளார், ராமானந்த குமரகுரு சாமிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.