கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே மேல்நிலை குடிநீர் தொட்டியில் இளைஞர் ஒருவரின் சடலம் மிதந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே ராஜேந்திர பட்டினம் கிராமத்தில் மேல்நிலைகுடிநீர் தொட்டி ஒன்று பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டுக்காக இருக்கிறது. அந்தத் தொட்டியிலிருந்து கடந்த சில தினங்களாக துர்நாற்றம் வீசவே சந்தேகமடைந்த ஊர் மக்கள் குடிநீர் தொட்டியில் சோதனை செய்தனர்.
அப்போது அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் பிணமாக மிதந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் காவல்துறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை இறந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.
மேலும் காவல்துறையினர் அந்தப் பகுதி முழுவதும் சுற்றி விசாரணை நடத்தினர். இந்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது இவரை யாரும் கொலை செய்து தண்ணீர் தொட்டிக்குள் போட்டுச் சென்றார்களா? என்ற கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் காவல்துறையின் விசாரணையில் இறந்த நபர் ராஜேந்திரபட்டினம் கிராமத்தைச் சார்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான சிவசங்கரனின் மகன் சரவணகுமார் (34) என தெரிய வந்திருக்கிறது. பொறியியல் பட்டதாரியான இவரை கடந்த 9 நாட்களாக காணவில்லை என காவல்துறையில் புகார் செய்த நிலையில் தற்போது குடிநீர் தொட்டிக்குள்ளிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.