திருப்பத்தூர் அருகே இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சார்ந்தவர் மகேஷ் குமார். இவரது மனைவியின் பெயர் ஜமுனா. இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இடையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக கணவன் மற்றும் மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து இருவரும் பிரிந்து விட்டனர். ஜமுனா பெரியாங்குப்பத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். திருமணமான பின்பும் வருட கணக்காக தாய் வீட்டிலேயே இருப்பதால் அவரது குடும்பத்தினர் இடையே பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.
இதில் ஜமுனாவிடம் சில குடும்ப உறுப்பினர்கள் கடினமாக நடந்து கொண்டதாக தெரிகிறது. சம்பவங்களால் வேதனையடைந்த ஜமுனா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அறைக்கு சென்று விட்டார். அவர் அறைக்குச் சென்று நீண்ட நேரமாகியும் திரும்பாததால் அறையின் கதவை உடைத்து பார்த்தனர் குடும்பத்தினர். அப்போது அவரது இரண்டு குழந்தைகளும் ஜமுனாவும் மயங்கி கிடப்பது தெரிய வந்தது. அருகில் குளிர்பான மற்றும் விஷப்பாட்டில் ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து அவர்களை மீட்ட குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தைகளை சோதித்த மருத்துவர்கள் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தது அனைவரையும் கலங்கச் செய்தது. ஜமுனாவிற்கே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.