திருச்சி மாவட்டம் துறையூரில் பூட்டியிருந்த தியேட்டருக்குள் கைவரிசை காட்டிய 20 வயது இளைஞன் மற்றும் மூன்று சிறுவர்களை காவல்துறை கைது செய்து இருக்கிறது. திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தியாகி சிங்காரவேலர் தெருவை சார்ந்தவர் பிரகாஷ் இவர் பெரம்பலூர் செல்லும் சாலையில் பெரியார் நகர் அருகே திரையரங்கம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த ஒரு மாத காலமாக பராமரிப்பு வேலைகளின் காரணமாக தியேட்டர் மூடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று தியேட்டரை பார்வையிட சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது தியேட்டரில் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிரகாஷ் உள்ளே சென்று பார்த்த போது திரையரங்கில் இருந்த 25 சேர்களை காணவில்லை. மேலும் அங்கிருந்த தட்டு முட்டு சாமான்கள் என கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் திருடு போயிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பிரகாஷ் இது தொடர்பாக துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் இது தொடர்பாக நடத்திய தீவிரமான விசாரணையில் பெரியார் நகரைச் சார்ந்த அஜித் என்ற இருபது வயது இளைஞர் அது தெருவைச் சார்ந்த மூன்று சிறுவர்களை பயன்படுத்தி தியேட்டரில் இருந்த சேர்கள் மற்றும் தளவாட சாமான்களை திருடி விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அஜித்தை கைது செய்த போலீஸ் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தது. அவருக்கு உறுதுணையாக இருந்த மூன்று சிறுவர்களும் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர். மாஸ்டர் திரைப்பட பாணியில் திருடுவதற்கு சிறுவர்களை பயன்படுத்திய சம்பவம் திருச்சி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.