திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சைக்கிளில் சென்ற மூன்று மாணவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள வளையம்பட்டு கிராமத்தைச் சார்ந்த பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சைக்கிள் மூலமாக அங்குள்ள அரசு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது வளையம்பட்டு மேம்பாலம் அருகே அவர்கள் சாலையை கடக்க முயன்ற போது வேகமாக வந்த கார் மாணவர்களின் மீது மோதி கவிழ்ந்தது.
இந்த சம்பவத்தில் மூன்று மாணவர்கள் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த மாணவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான மாணவர்கள் அப்பகுதியைச் சார்ந்த ரபீக், விஜய் மற்றும் சூர்யா என்ன தெரிய வந்திருக்கிறது. காவல்துறையின் விசாரணையில் பெங்களூரில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த கார் மாணவர்களின் மீது மோதியது தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக பள்ளி மாணவர்களின் பெற்றோர் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் விபத்து குறித்து ஆய்வு செய்தார். சாலை விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.