நீட் தேர்வில் உடையில் அதிக பட்டன் இருந்ததால் அனுமதி மறுக்கப்பட்ட மாணவிக்காக, திருப்பூரில் ஒரு பெண் காவலர் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று, மாற்று உடை வாங்கி கொடுத்து தேர்வு எழுதச் செய்தார்.
நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புக்களுக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. தேசியத் தேர்வு முகமை (என்டிஏ) ஆண்டுக்கு ஒரு முறை இந்த நீட் தேர்வை நடத்தி வருகிறது. அந்த வகையில் 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு ஒரே கட்டமாக இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள்இந்த நீட் தேர்வை எழுதவுள்ளனர். தேசிய அளவில் 23 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகிறார்கள்.
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, சேலம், தஞ்சை உள்ளிட்ட 31 மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னையில் மட்டும் 41 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு மாலை 5.20 மணி வரை நடைபெறும். தேர்வர்கள் பிற்பகல் 1.30 மணிக்கே தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மோதிரம், வளையல், கம்மல், மூக்குத்தி, செயின் உள்ளிட்டவைகளை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண் தேர்வர்கள் முழுக்கை சட்டை அணியக் கூடாது எனவும், பெண் தேர்வர்கள் துப்பட்டா அணியக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருப்பூர் திருமுருகன்பூண்டியில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள நீட் தேர்வு மையத்திற்கு நீட் தேர்வு எழுத வந்த மாணவி அணிந்திருந்த ஆடையில் அதிக பட்டன்கள் இருந்ததால் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளனர். இதனால் அந்த மாணவி அதிர்ச்சி அடைந்துள்ளார். தேர்வு எழுத முடியாமல் போய் விடுமோ என்ற பயத்தில் அந்த மாணவி அங்கேயே கண்ணீர் விட்டு அழுதார்.
இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் அந்த மாணவியை தனது இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள கடைக்கு அழைத்துச் சென்று வேறு உடை வாங்கிக் கொடுத்து, மீண்டும் அழைத்து வந்து நீட் தேர்வு மையத்திற்கு கொண்டு வந்து விட்டார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: மேலும் ஒரு மாணவி தற்கொலை.. உயிர்க்கொல்லி “நீட்” தேர்வு எப்போது தான் ஒழியும்..! அன்புமணி ஆவேசம்…!